பனிக்காலம்!… JN.1 தொற்று உள்ளதா?… கண்டுபிடிப்பது எப்படி?
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விட்டு சென்றது. உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு பொருளாதார பாதிப்பு என மக்களை நிலைகுலையை வைத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்த தொடங்கிய பிறகே கட்டுக்குள் வந்தது. அதன் பிறகும் கொரோனா வைரஸ் உருமாறி அவ்வப்போது அதிவேகமாக பரவினாலும் பாதிப்பு என்பது துவக்கத்தில் இருந்தது போல இல்லை.
இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஓமிக்ரான் BA.2.86 வகை அல்லது பைரோலாவின் துணை வேரியண்ட் ஆகும். இந்த வைரஸ் பாதிப்பு முதலில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியபட்டது. அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி சீனாவில் 7 பேருக்கு இந்த புதுவகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனாவின் அறிகுறிகளாக லேசான காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி ஆகியவை உள்ளன.
கடந்தாண்டு டிசம்பர் மாத கடைசியில்தான் இந்த JN.1 வகை வைரஸ் டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தடாலடியாக அதன் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. தேசிய தலைநகரில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள 24 பேரில் மூன்று பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜேஎன் 1 பாதித்த முதல் நபர் சில நாட்களிலேயே குணமடைந்துவிட்டார். மற்ற நோயாளிகளும் குணமடைந்துவிட்டனர். டெல்லி மாநிலத்தை சேராத கோவிட் பாதித்த 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நோயாளிகள் வீட்டுத்தனிமையிலே குணமடைந்து வருகிறார்கள். குறைவான அறிகுறிகளுடன் 2 அல்லது 3 நாட்களிலே நோயாளிகள் தேறிவருகிறார்கள்.
ஜேஎன் 1ஐ தவிர டெல்லியில் பிஏ.2, எக்ஸ்பிபி.2.3, ஹெச்வி.1 மற்றும் ஹெச்கே.3 ஆகியவையும் உள்ளது. மரபணு சோதனைகளின் முடிவின்படி, இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹெச்வி.1 வகை வைரஸ்தான் அமெரிக்காவில் அதிகம் உள்ளது. ஜேஎன்1-னுடன் இந்த வைரசும் அங்கு விரைவாக பரவிவருகிறது.