ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!
கோடைகாலத்தில் ஏசியின் தேவை அதிகளவில் இருக்கும். இந்த கோடைகாலத்தில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வீட்டில் ஏசியை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக ஏசியை 12 முதல் 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இயக்கக் கூடாது. அவ்வப்போது சர்வீஸ் செய்து வைத்து கொள்ள வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அவ்வப்போது ஏசி பில்டரையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்தினால், வெப்பம் அதிகரித்து ஏசியில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறியுள்ளது. எனவே, ஏசியை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏசி மட்டுமின்றி, எந்த ஒரு இயந்திரத்தையும் அதிக நேரம் இயக்கினால் அது சூடாகும். சில சமயங்களில் வெடிக்கவும் கூடும். ஒரு நாளில் நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தி இருந்தால், சிறிது நேரம் அதற்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
ஏசியை தொடர்ந்து இயக்கினால் ஏற்படும் பிரச்சனைகள்...
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் வீடுகளில் நாள் முழுவதும் ஏசி இடைவிடாது இயங்கும். இதனால் கரண்ட் பில்லும் எகிறும். அதே சமயம் இப்படி இயக்குவதால், பாதிப்பும் அதிகம். நீண்ட நேரம் ஏசி ஓடினால் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஏசியின் வெளிப்புற யூனிட்டை சுற்றி சரியான காற்றோட்டம் இல்லை என்றால் வெப்பம் வெளியேற முடியாது. இதனால், ஷார்ட் சர்க்யூட் அல்லது வயரிங்கில் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதே போல ஏசி ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அதிக பவர் சப்ளை வந்தால், கன்டென்சரில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது எப்படி..?
வீட்டில் தினசரி அதிக நேரம் ஏசியை பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு 5-6 மணி நேரத்திற்கும் பிறகு 30 நிமிடங்கள் அதற்கு ஓய்வு கொடுங்கள். ஏசியின் வெளிப்புற யூனிட் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏசியின் வெளிப்புற யூனிட்டில் இருந்து வரும் சூடான வெப்பம் வெளியேற நல்ல காற்றோட்டம் அவசியம். அடிக்கடி ஏசியின் பில்டரை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பொதுவாக 10 நாட்களுக்கு ஒருமுறை ஏசி ஃபில்டரை சுத்தம் செய்வது நல்லது. உங்கள் ஏசியில் ஏதாவது சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும், உடனடியாக சர்வீஸ் செய்து கொள்ளுங்கள். ஏசிக்கு மின்சாரம் வரும் வயரிங் நல்ல முறையில் இருப்பது அவசியம். மேலும், நல்ல தரமான சாக்கெட்டுகள் மற்றும் பிளக்குகளைப் பயன்படுத்தவும்.