இனி தேர்தல் இருக்குமா..? இருக்காதா..? எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் பரபரப்பு பேச்சு..!!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு வெந்நீரை பாய்ச்சி வருகிறது. மாநில உரிமைகளைக் கேட்கவே இந்த கூட்டம். மக்கள் பலம் என்ற பலத்தோடு இருக்கிறார் ஸ்டாலின். பாஜகவை எதிர்க்க கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான். தொடர்ச்சியாக மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது. 100 ஆண்டுக்காலம் கொண்ட சட்டமன்ற மரபுகளை ஆளுநர் மீறியுள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது மோடி அரசு அடக்கு முறையை ஏவுகிறது. பாரத பிரதமர் மோடி விளம்பரம் மோக தலைவராக உள்ளார். நமக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்கிறது மத்திய அரசு.
தமிழ்நாட்டு மீது நயவஞ்சகம் செய்துள்ளது. பிரிவினையை ஏற்படுத்தி மத வெறியை
தூண்டி வருகிறது. நாம் விழித்து எழ வேண்டும். இந்த 2024ஆம் ஆண்டு எம்.பி தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.
இனி தேர்தல் இருக்குமா ? இருக்காதா ? ஜனநாயக மரபு இருக்குமா ? இல்லையா ? என
தீர்மானிக்கப் போகின்ற தேர்தல், சமதர்மம் தழைக்குமா ? தழைக்காதா ? மாநிலங்களுக்குச் சுயாட்சி இருக்குமா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்யும் தேர்தல். இனி மாநிலங்களுக்கு தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்படுமா ? இல்லையா என முடிவு செய்கின்ற தேர்தல். அந்த களம் எப்படி இருந்தாலும் எதிரிகளை உடன்பிறப்புகளுடன் இணைந்து நாடளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாகை சூடுவோம்” என்றார்.