மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி சேர்ப்பா..? மத்திய அரசு தீவிர ஆலோசனை..!!
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த 2020 ஏப்.1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் பணி நடைபெறாமல் போனது.
முன்னதாக, 2011இல் 'சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு' நடத்தப்பட்டது. அதன் தரவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.
இதையடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியைத் தொடங்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீகாரில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாஜக அல்லாத மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சித்து வருகின்றன.
இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி குறித்த கணக்கெடுப்பையும் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
Read More : நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?