ஒருபக்கம் காட்டுத்தீ; ஒருபக்கம் பனி புயல்!. அமெரிக்காவை புரட்டி எடுக்கும் இயற்கை பேரழிவு!. கொத்து கொத்தாக பலியாகும் மக்கள்!
America: லாஸ் ஏஞ்சல்ஸில் கடும் காட்டு தீயால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹாலிவுட் நகரம் என்று சொல்லப்படும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டூத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயால், அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. அதன்படி, கிட்டத்தட்ட, அப்பகுதியில் வசித்த 1.30 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது. புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 50 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். பனிப்புயல் மிகக்கடுமையாக வீசியதால் டெக்சாஸ், லூசியானா நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயார்க் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் சாலைகளில் ஒன்றரை அடி உயரம் பனி குவிந்துள்ளன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் காரணமாக 2,200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 3000 விமான சேவைகள் தாமதமாகி உள்ளன. மணிக்கு ஒன்றரை செ.மீ. என்ற வேகத்தில் பனித்துகள் கொட்டும் என்பதால் பயணங்களை தவிர்க்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆர்லியன்ஸ் மற்றும் லூசியானாவில் 28 செ.மீ. உயரத்துக்கு பனித்துகள் கொட்டி வருகிறது.