இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை ஏன் வழங்கப்படவில்லை...? அமைச்சர் கொடுத்த விளக்கம்
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை ஏன் வழங்கப்படவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.2,028 கோடி செலவிடப்பட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.36,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசோ மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.226 கோடி மட்டுமே வழங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,159 கோடியும் வழங்கப்படவில்லை. அதனால்தான் பொங்கல் பரிசுத் தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 வழங்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கூறினார். அதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “நீங்கள் தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகை கொடுத்தீர்கள். இப்போது தேர்தல் வரவில்லை. அது வந்த பிறகு பார்ப்போம்" என்றார்.