தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது ஏன்..? அவையில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள்..!! விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!!
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிக நிதிகளும், சிறப்பு திட்டங்களும் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் மத்திய அரசுக்கு வரி வருவாய் அதிகம் அளிக்கும் தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
இது தமிழ்நாட்டை சேர்ந்த கட்சிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன் வைத்த போது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Read More : ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் நல்ல வருமானம் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?