குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடுவது ஏன்..? சுவாரஸ்யமான வரலாற்று உண்மை
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த தினத்தை நாம் குடியரசு தினமாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
அதே போன்று, அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பொது துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நிலையில் குடியரசு என்றால் என்ன ?? ஏன் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடுகிறோம்? இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியில் இந்த ஜனவரி 26, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1929-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் அவையின் தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார். அந்த நேரத்தில் தான், மேலாட்சி அரசு முறை (பிரிட்டிஷ் மன்னர் தொடர்ந்து அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் - dominion status) பெற்றால் போதும் என்ற இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை நேருவும்,சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக எதிர்க்க துணிந்தனர். பிரிட்டிஷ் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்பது இவர்களின் அடிப்படை வாதமாக இருந்தது.
டிசம்பர் 31, 1929 அன்று, நேரு ரவி நதியின் கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி முழுமையான சுயராஜ்யத்தை கோரினார். இந்தியா ஜனவரி 26, 1930 அன்று தனக்கான சுயராஜ்யத்தை அடையும் என்றும் நேரு அறிவித்தார். இந்த ஜனவரி 26ம் தேதி அடுத்த 17 ஆண்டுகளுக்கு பூர்ணா ஸ்வராஜ் தினமாக கொண்டாடப்பட்டது. ஜனவரி 26, 1930 அன்று காங்கிரஸ் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானத்தை (அல்லது) சுதந்திரப் பிரகடனத்தை நிறைவேற்றியது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் நாள் இந்தியக்குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைப்பார். குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிற்கு சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு படைகளின் அலங்கார அணிவகுப்புகளும் நடைபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகளும் நடைபெறும்.
டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றுவதை போல் மாநிலங்களில் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதுடன் காவலர் அணிவகுப்பு, அரசுத்துறை அலங்கார ஊர்திகளையும், கலைநிகழ்ச்சியையும் பார்வையிடுவார்.. மேலும் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
Read more : வந்த நோயை உடனே திருப்பி அனுப்ப, வீட்டில் இந்த செடிகளை வளர்க்க வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்க..