’என் மகனுக்கு ஏன் சீட் கொடுக்கல’..!! திமுக தலைமை மீது சபாநாயகர் அப்பாவு அதிருப்தியா..?
நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பு வழங்காததால், நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது தவறு என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் வெற்றிபெற்றார். எனவே, இந்த முறையும் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படும் என கணக்குப் போட்டு திமுகவில் இருந்து 44 பேர் விருப்ப மனு அளித்தனர். அதில் சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவுவும் ஒருவர். ஆனால், அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே, நெல்லையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சபாநாயகர் அப்பாவு உட்படப் பல திமுக நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது. இந்த சர்ச்சை குறித்து நாங்குநேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதிலோ, எனது மகனுக்கு சீட் கொடுக்காததாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி தொகுதியில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவரணி செயலாளராகி உள்ள எனது மகனுக்குப் போட்டியிட வாய்ப்பு அளித்தால் அது எப்படிச் சரியாகும்?. எனது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவில் விவரம் இல்லாதவன் இல்லை நான். யார் கொடுத்த அழுத்தம் காரணமாக இது போன்ற செய்தி அவதூறாகப் பரப்பப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.