உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் வாக்கிங் போனாலும் இதய பாதிப்பு ஏற்படுவது ஏன்..? வல்லுநர்கள் கூறுவது என்ன..?
நாள் முழுவதும் அதிகம் நகராமல் உட்கார்ந்த படியே இருந்துவிட்டு, அதனை ஈடுசெய்ய பலர் 45 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங் என உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த சிறிய கால அளவிலான உடற்பயிற்சியால் நாள் முழுவதும் செயல்படாமல் இருக்கும் குறையை ஈடு செய்ய முடியாது. நமக்கு உடற்பயிற்சி மற்றும் செயல்பாடு இரண்டும் தேவை என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலையின் இதய நோய் தடுப்புக்கான ஆராய்ச்சி இயக்குனர் மைக்கேல் பிளாஹா.
உடற்பயிற்சி உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தவும், தசைகளை வலுப்படுத்தவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் நாமே குறிப்பிட்ட நேரத்தில் முன்னெடுக்கும் முயற்சி. ஆக்டிவிட்டி என்பது என்பது நாள் முழுவதும் நாம் எவ்வளவு ஓடி ஆடி வேலை செய்கிறோம் என்பதை பற்றியது. உட்கார்ந்து பார்க்கும் வேலை என்றாலும், ஒருவர் உட்கார்ந்தபடியே இருப்பார். லிப்டில் செல்வார். பக்கத்து கடைக்கு கூட வண்டி எடுத்துச் செல்வார். இன்னொருவர் படியைப் பயன்படுத்துவார், நிற்பார், குதிப்பார். இது தான் இரண்டுக்குமான வித்தியாசம்.
வாக்கிங் போன்ற உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்குவது ஆரோக்கியமான பழக்கம் தான். ஆனால், உங்களின் ஆக்டிவிட்டியையும் அதிகரிப்பது அவசியம். இல்லையென்றால், என்ன தான் அரை மணி நேரம் வாக்கிங் சென்றாலும், நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.
வாரத்திற்கு 5 நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிர உடற்பயிற்சியை செய்யுங்கள். அலுவலகம் அல்லது தொழில் இடத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு ஐந்து நிமிடம் எழுந்து செல்லுங்கள், நில்லுங்கள், குதியுங்கள். ஆக்டிவாக இருங்கள். ஒரு நாளைக்கு 10,000 எட்டு எடுத்து வையுங்கள்.