’படத்தில் இருந்து விலகியது ஏன்’..? ’மைக் மோகன் பெயர் எப்படி வந்தது’..? அவரே சொன்ன பதில் இதோ..!!
தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத நடிகர் மோகன். 1980கள் தொடங்கி 1990கள் வரை கொடி கட்டி பறந்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் நாயகன். மோகன் என சொல்வதைவிட 'மைக்' மோகன் எனப் புகழப்படும் அளவுக்குப் பாடல்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திரையில் உணர்வுகளை வெளிப்படுத்தியவர்.
திரையுலகில் உச்சகட்ட புகழில் இருந்த இவர், திடீரென்று நடிப்பதைத் தவிர்த்தார். படங்களைக் குறைக்கத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது 'ஹரா' திரைப்படம் வெளியானது. மீண்டும் இவரது வருகை பலரிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மைக் மோகனாக மாறிய கதை பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் மோகன் பேசுகையில், ”எனக்குச் சொந்த ஊர் என்றால் அது பெங்களூருதான். 1979இல் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தேன். அதற்குப் பிறகு நான் சொந்த ஊருக்குப் போகவே இல்லை. அந்தளவுக்குப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இங்கேயே தங்கிவிட்டேன். பாலுமகேந்திரா தான் என்ன 'கோகிலா' படத்தில் நடிக்க அழைத்தார். அதுதான் என் முதல் படம்.
பாலுமகேந்திரா பட்டறையில் நான் தான் மூத்த பிள்ளை. 'பயணங்கள் முடிவதில்லை' படம் வெளியாவதற்கு முன்பு வெறும் மோகனாகவே இருந்தேன். அந்தப் படம் வெளியான பிறகு தான் மைக் மோகனாக மாறினேன். இளையராஜா இசை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. அவர் இசைதான் என்னை வாழ வைத்தது. தினமும் 3 படங்கள் ஷுட்டிங் போவேன். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரி நடிப்பதைப்போல எனக்குத் தோன்றியது. வேறு கதைகளைத் தேடலாம் என ஆசைப்பட்டபோது, கதைகள் எனக்கு அமையவில்லை. அதனால் ஒரே மாதிரியான கதைகளை தவிர்த்தேன். அதனால் ஒரு இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.
மேலும், தனது படங்களில் 'நூறாவது நாள்' போன்ற படங்களை பார்ட் 2 எடுக்கலாம். அதற்கான வாய்ப்புள்ளது. அதற்குக் காலம் கைகூடி வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுவாக மைக் மோகனின் பாடல்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றைக்கும் விரும்பிக் கேட்டு வந்தாலும், இவர் தனது பாடல்களைக் கேட்கமாட்டேன் என்கிறார்.
Read More : மின்வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்..!! இனி எல்லாமே செல்போனில் தான்..!! என்ன தெரியுமா..?