”என்னடா இப்படி இறங்கிட்டீங்க”..!! ஒரு கிராமத்தையே இருளில் மூழ்க வைத்த கும்பல்..!! டிரான்ஸ்பார்மரையே களவாடிய பரபரப்பு சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டதில் சோராஹா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான் என நினைத்த கிராம மக்கள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில்தான் கிராமத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் 250kVA டிரான்ஸ்பார்மரையே யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. அதில் விற்கத் தகுந்த அனைத்தையும் திருடிவிட்டு, வெறும் எலும்பு கூடாக அந்த டிரான்ஸ்பார்மரை மட்டும் விற்றுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, மின்சார வாரியத்தில் புகாரளித்தும், தற்போதுவரை அந்த கிராம மக்களுக்கு மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கிராம மக்கள், “மின்சாரம் இல்லாமல், இன்வெர்ட்டர்கள், மொபைல் போன்கள், விவசாயத்துக்கான பம்புகள் என எதுவும் செயல்படுத்த முடியவில்லை. கரண்ட் இல்லாததால், மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனத் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மின்சாரத் துறை அதிகாரி நரேந்திர சவுத்ரி, “தற்காலிக நடவடிக்கையாக அருகிலுள்ள கிராமத்திலிருந்து மாற்று மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையிடம் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்ள கேட்டிருக்கிறோம். அடையாளம் தெரியாத நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆரம்ப விசாரணைகள் நடந்து வருகிறது" என்றார்.