அப்பாவி மக்களை துரத்துவது ஏன்...? இருவேல்பட்டு கிராம மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை....!
பொன்முடி மீது சேறு வீசியதாக காவல்துறையினரால் விரட்டி விரட்டி கைது செய்யப்படும் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதனைப் பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் காவல் நிலையம் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது. இது பெண்களைக் கைது செய்யும்போது, மகளிர் காவலர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும். புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. திமுக அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள். நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? திமுக அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.