மாணிக்கம் தாகூர் Vs ராதிகா Vs விஜய பிரபாகரன் - விருதுநகரில் வெல்வது யார்? கருத்து கணிப்பு சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் நட்சந்திரங்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அந்தத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அதனை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார் சரத்குமார். இந்த நிலையில், அவரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பாஜக சார்பாக விருதுநகரில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக சி.கௌசிக் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை மதிமுக சார்பாகக் களம் கண்ட அதன் தலைவர் வைகோவும், மூன்றாவது இடத்தைத் திமுக வேட்பாளரான மதுரையைச் சேர்ந்த ரத்தினவேலுவும் பிடித்தனர். நான்காவது இடத்துக்குக் காங்கிரஸ் சார்பாகக் களம் கண்ட மாணிக்கம் தாகூர் தள்ளப்பட்டார்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரிந்து தேர்தலைச் சந்தித்த திமுக, காங்கிரஸ், மதிமுக என அனைத்துக் கட்சி ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பாக மீண்டும் களம் கண்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். தற்போது 4-வது முறையாக மீண்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே, தொகுதிக்குப் பரிச்சயமானவர் என்னும் முறையில் இந்த முறையும் அவர் வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.
தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக 2வது இடத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 30 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொகுதியில் பாஜக 3வது இடத்துக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா 17 முதல் 23 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெறுவார் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஓட்டுகள் பெற்று 4வது இடத்தில் இருக்கும் என தனியார் செய்தி தொலைக்காட்சி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.