அதிரடி மாற்றம்..! அடுத்த தலைமைச் செயலர் யார்...? சிவ்தாஸ் மீனாவுக்கு புது பொறுப்பு...!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக முதல்வரின் செயலர் முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019-ம் ஆண்டு முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.
புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதால், தலைமைச் செயலர் மாற்றம் வர வாய்ப்புள்ளது. புதிய தலைமைச் செயலராக முதல்வரின் செயலர் முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்ரெடரி பதவிக்கு மீண்டும் உதயசந்திரன் வரலாம், அல்லது உமாநாத் நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.