யார் இந்த விஜய்..? அவர் எப்படி எங்கள் தலைவரை கொச்சைப்படுத்தலாம்? சீறிய ஆளுர் ஷாநவாஸ்..
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் இந்த விழாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் வராததற்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தம் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய விஜய் “ இன்று இந்த நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரமுடியவில்லை. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு, அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவரின் மனம் இன்று முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்.” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் பேசியது கண்டிக்கத்தக்கது என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ சுயம்புவாக எழுந்த வந்த ஒரு தலைவரை, சுயமாக சிந்திக்கக் கூடிய அறிவும், திறனும் பெற்ற ஒரு தலைவரை, எழுத்தாலும், பேச்சாலும், முதிர்ச்சியாலும் உயர்ந்து நிற்கும் ஒரு தலைவரை கூட்டணி கட்சிகளின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடப்பவர், முடிவெடுக்க தெரியாதவர் என்பது போன்று விஜய் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது அபத்தமானது, கண்டிக்கத்தக்கது.
எங்கள் தலைவர் குறித்து கலைஞர் இப்படி சொன்னது கிடையாது, ஜெயலலிதா இப்படி சொன்னது கிடையாது, இப்போது இருக்கும் முதலமைச்சர் இப்படி சொன்னது கிடையாது. அவர்களுக்கு எதிரான கருத்துகளை நாங்கள் முன்வைத்த போது கூட, அவரின் கட்சிக் கொள்கை இப்படி பேசுகிறார் என்று தான் முதலமைச்சர் சமீபத்தில் கூட சொன்னார். கலைஞருடன் எத்தனையோ விஷயங்களில் எங்கள் தலைவர் முரண்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் எங்கள் தலைவரின் ஆளுமையை சிதைத்து அவர் பேசியது கிடையாது.
ஜெயலலிதா கூட அவர் எங்களுடன் கூட்டணியில் இல்லை என்றாலும் அவர் ஒரு நல்ல தலைவர் என்று தான் வாழ்த்தினார். ஆனால் யார் இந்த விஜய்? எங்கள் தலைவரை இப்படி கொச்சைப்படுத்துவதற்கு யார் இவர்? திமுகவின் கட்டுப்பாட்டில் எங்கள் தலைவர் இருக்கிறார் என்று எப்படி இவர் பேசலாம்.?
எங்கள் தலைவர் முடிவெடுக்க கூடிய தலைவர், அறிவார்ந்த தலைவர் என்பது உலகத்திற்கே தெரியும். அறிவார்ந்து பேசக்கூடிய ஒரு தலைவரை நேற்று வந்த கூத்தாடி இப்படி பேசலாமா? இதை நாங்கள் அனுமதிக்க முடியுமா? திமுகவின் கட்டுப்பாட்டில் திருமாவளவன் இருக்கிறார் என்று விஜய் எப்படி பேசலாம்.?
கூட்டணி அழுத்தத்தால் எங்கள் தலைவர் இந்த விழாவிற்கு செல்லவில்லையா? விஜய் எங்கள் தலைவரை எவ்வளவு மலினப்படுத்துகிறார்..? அவருக்கு அந்த உரிமை கிடையாது. விஜய் ஒரு தலைவரே இல்லை. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை இது காட்டுகிறது ” என்று கடுமையாக விமர்சித்தார்.
Read More : கூட்டணி அழுத்தத்தால் திருமாவளவன் வரவில்லை… “மனம் முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” – விஜய் பேச்சு…