சவுக்கு சங்கர் வழக்கில் பின்னால் இருப்பது யார்? கண்டுபிடிக்கக் கோரி காவல்துறை கடிதம்
யூடியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தது யார் ? என சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் தொடந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், பி பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் இந்த வழக்கில் அதிகார பலம் பொருந்திய இரண்டு பேர் தன்னை சந்தித்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த அந்த இரண்டு பேர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார் மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.
மேலும், மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறுகையில், “நீதிபதி சொல்கிறார்.. உயர்பொறுப்பில் உள்ள இரு நபர்கள் என்னை சந்தித்தார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள் என சொன்னது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு இருப்பவர்கள் யார். அவர்கள் அவ்வாறு செய்தது நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதாகும். எனவே அந்த இருநபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டிஸில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். ஏனெனில் இவர்களை அனுப்பியது யார் என்றும் சிபிஐ விசாரிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நீதி பரிபாலனத்தில் யார் தலையிட்டாலும் ஏற்க முடியாது என்ற கருத்தும் நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டு இருந்தால் அவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது ஆனால் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றக் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரி பரந்தாமன் கூறுகையில், “நீதிபதியை நேராகப்பார்த்து அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை நீங்கள் விசாரிக்காதீர்கள் என சொன்னால், அது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு” என தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமி நாதனுக்கு எதிராக கடந்த கால தீர்ப்புகளை மேற்கோள் காட்டி கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். சவுக்கு சங்கர் விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது .மேலும் இது தொடர்பான வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பளிப்பதை பொறுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது