யார் இந்த AARON BUSHNELL.? பாலஸ்தீன விடுதலைக்காக இஸ்ரேலிய தூதரகம் முன்பு தீக்குளித்த அமெரிக்க விமானப் படை வீரர்.!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த வீரர் தீக்குளித்த சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த நபர் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த AARON BUSHNELL என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீக்குளிப்பதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் தன்னுடைய போராட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய அந்த நபர் தன்னை ஆரோன் புஷ்னெல் என அடையாளப்படுத்தி இருக்கிறார். மேலும் FREE PALESTINE என்ற கோஷங்களை எழுப்பியவாறு தன்மீது எரிபொருளை ஊற்றி தீப்பற்ற வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்ற நபர் சிறிது தூரத்தில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரது உடலில் பற்றி எரிந்த நெருப்பினை அனைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.
அந்த விமானப் படை வீரர் தன் மீது தீப்பற்ற வைத்துக் கொண்ட வீடியோ Twitch என்ற சமூக வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக Twitch சமூக வலைத்தளம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு ஏஜென்சி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விமானப் படை வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக X வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு நபர் பாலஸ்தீனில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பு தீக்குளித்த நபர் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் 25 வயதான ஆரோன் புஷ்னெல் என தெரிவித்து இருக்கிறார். அந்த நபரை தான் 2022 ஆம் ஆண்டு சந்தித்ததாகவும் பதிவு செய்துள்ளார் .
மேலும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அமெரிக்கா விமானப்படையில் பணியாற்றும் வீரர் என்பதை உறுதி செய்தார். ஆனால் அவர் குறித்த பெயர் மற்றும் பிற தகவல்களை வெளியிடவில்லை.