முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்கள் யார்..? அவர்களின் தொழில், கல்வி, சாதனைகள் பற்றி தெரியுமா..?
இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். நாட்டின் 13வது பிரதமரான மன்மோகன் சிங், ஆழ்ந்த அறிவுத்திறன், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட தலைவர் ஆவார்.. மன்மோகன் சிங்கின் அரசியல் மற்றும் பொருளாதார பங்களிப்புகளை தாண்டி, அவரது குடும்பம், குறிப்பாக அவரது மகள்கள், தங்கள் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.
செப்டம்பர் 26, 1932 இல், இப்போது பாகிஸ்தானில் உள்ள கா-வில் பிறந்த டாக்டர். மன்மோகன் சிங்கின் முக்கியப் பயணம் நட்சத்திரக் கல்விச் சான்றுகளுடன் தொடங்கியது. அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார், அதைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் மிகவும் பிரபல்மான பொருளாதார நிபுணராக இருந்தார். தலைமை பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மற்றும் திட்டக்குழுவின் துணைத் தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை மன்மோகன் சிங்கின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக அவர் பதவி வகித்தார். அப்போது அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் பாதையில் கொண்டு சென்றது.
டாக்டர். மன் மோகன் சிங் 2004 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை பிரதமராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) மற்றும் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் உள்ள கொள்கைகள் போன்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்பார்வையிட்டார். மன் மோகன் சிங்கின் அமைதியான நடத்தை மற்றும் அறிவார்ந்த அணுகுமுறை அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் அவருக்கு உலகளாவிய மரியாதையை பெற்றுத் தந்தது.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் ஆவர். இந்த தம்பதிக்கு உபிந்தர் சிங், அம்ரித் சிங் மற்றும் தமன் சிங் என்ற மகள்கள் உள்ளனர். அவரது மகள்கள் மூவருமே, தங்களின் துறைகளில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.
உபிந்தர் சிங்
உபிந்தர் சிங் ஒரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் டீன் ஆவார். இதற்கு முன்பு அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையின் தலைவராகவும் பணியாற்றினார். டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான இவர், பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் அரசியல் கருத்துக்களை விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
பண்டைய மற்றும் ஆரம்பகால இடைக்கால இந்தியா மற்றும் பண்டைய இந்தியாவில் அரசியல் வன்முறை போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்.. ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் மற்றும் லைடன் போன்ற நிறுவனங்களில் பெல்லோஷிப் மூலம் அவரது கல்விப் பயணம் மிகவும் செழுமையாக உள்ளது. 2009 இல், சமூக அறிவியலுக்கான இன்ஃபோசிஸ் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
அம்ரித் சிங்
அம்ரித் சிங் ஒரு முக்கிய மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியில் சட்டப் பயிற்சிப் பேராசிரியர் ஆவர். அவர் ரூல் ஆஃப் லா இம்பாக்ட் ஆய்வகத்தின் நிறுவன நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார். யேல் சட்டப் பள்ளி, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அம்ரித், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான காவலில் வைக்கும் நடைமுறைகளுக்கு எதிரான வழக்குகள் உட்பட, உலகளாவிய மனித உரிமை வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் மற்றும் மனித மற்றும் மக்கள் உரிமைகளுக்கான ஆப்பிரிக்க ஆணையத்தின் முன் உள்ள வழக்குகள் உட்பட, அவரது பணி சர்வதேச வழக்குகளை உள்ளடக்கியது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய அவரது கட்டுரைகள் தி கார்டியன் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் போன்ற பிரபலமான சர்வதேச வெளியீடுகளில் வெளிவந்துள்ளன.
தமன் சிங்
தமன் சிங் ஒரு திறமையான எழுத்தாளர் ஆவார். அவர் “Strictly Personal: Manmohan and Gursharan” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இது அவரது பெற்றோரின் வாழ்க்கையைப் பற்றிய நெருக்கமான தகவல்களை வழங்குகிறது. The Sacred Grove and Nine by Nine, உட்பட அவரது மற்ற புத்தகங்கள் அவரது பல்துறை திறனை பிரதிபலிக்கின்றன. 1963 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்த அவர், தனது தந்தையின் சாதனைகளை நிறைவுசெய்யும் வகையில் வளமான கலாச்சார மற்றும் அறிவுசார் மரபைக் கொண்டுள்ளார்.
டாக்டர் மன்மோகன் சிங் மரணம்
டாக்டர். மன்மோகன் சிங் டிசம்பர் 26, 2024 அன்று தனது 92வது வயதில் காலமானார். புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவவமனையில் வயது தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு 9:51 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியலில் மன்மோகன் சிங்கின் ஈடு இணையற்ற பங்களிப்பு இருக்கும் அதே வேளையில், அவரது மகள்களின் சாதனைகள் அவர் ஊட்டிய மதிப்புகளை பிரதிபலிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Read More : “பத்ம விபூஷன் முதல் மன்னர் அப்துல் அஜீஸ் விருது வரை”.. மன்மோகன் சிங் வாங்கிய விருதுகளின் முழு விவரம்…