தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கு மழை பெய்யும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை (டிச.5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகள் பொறுத்தவரை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. இன்று (டிச.4) லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 - 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.