சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த சம்பவம் எப்போது..? இம்மாதமே இருக்கு..!! வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிசம்பர் 19 - 21ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து, தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளப்பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரும் சூழலில், இந்த மாவட்டங்களில் அடுத்து எப்பொழுது மழை பெய்யும் என்ற அப்டேட்டை வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.