தாஜ்மஹாலின் உண்மை வரலாறு என்ன?... ஆய்வு செய்ய அதிரடி உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்!
தாஜ்மஹாலின் உண்மை வரலாறு மற்றும் ராஜா மான்சிங் அரண்மனையை ஷாஜஹான் தான் பயன்படுத்தினாரா என்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று தொல்லியல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை கட்டியது யார் என்றும், அதன் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் எனவும் இந்து சேனா அமைப்பின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், 'முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்படவில்லை என்றும் ராஜா மான்சிங் என்பவர்தான் தாஜ்மஹாலை கட்டினார். ராஜா மான்சிங் அரண்மனையாக இருந்த தாஜ்மஹால், ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு அது அவரது மனைவியின் கல்லறையாக மாற்றப்பட்டது. எனவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான தகவல்களை வரலாற்றைப் புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல் துறை மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் தாஜ்மஹாலின் வயது, ராஜா மான்சிங் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு குறித்து ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடவேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திரசர்மா, துசார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தாஜ்மஹாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்தது. தொடர்ந்து நீதிபதிகள் தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வு நடத்தும்படி மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் ராஜா மான்சிங் அரண்மனையை சீரமைத்து ஷாஜஹான் பயன்படுத்தினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். முன்னதாக, தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினாரா என்பதை உறுதிப்படுத்தக்கோரி, இதே இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.