இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்.. சென்னையில் தொடரும் மர்மம்..!! - தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னை கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்க காரணம் என்ன? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை ஓரங்களில், இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்குவது சமீபநாட்களாகவே தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் திருவொற்றியூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியிருந்தன.. அடுத்த நாளே 15 ஆமைகள் கரையில் இறந்துகிடந்தன.. சில ஆமைகள் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. கடந்த வாரமும், நெம்மேலி குப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்தன. அதேபோல, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் 8 ஆமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. 4 நாளைக்கு முன்பும், உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து வருவது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்க காரணம் இதுவரை தெரியவில்லை..நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதேபோல, கடற்கரை நோக்கி வரும்போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறை அலுவலர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், மெரினா முதல் கோவளம் வரை கடலோரப் பகுதியில் ஆமைகள் இறந்து ஒதுங்குவது தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்க காரணம் என்ன? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வலைதான் கடல் ஆமைகள் உயிரிழக்க காரணமா?” எனவும் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.