சட்டசபையாகிறதா கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்.? புதிய திட்டங்கள் பற்றி அமைச்சர் சேகர் பாபு அசத்தல் அறிவிப்பு.!!
சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தென் தமிழகத்திற்கு இயங்கும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து செயல்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார் . இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வர இருக்கும் திட்டங்கள் பற்றி அவர் பேட்டியளித்திருக்கிறார்.
சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை நகரில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு கடும் அவஸ்தை நிலவி வருகிறது. பயணிகளின் அவஸ்தையை குறைக்கும் வகையில் சென்னையின் புறநகரான கிளாம்பாக்கம் பகுதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் பொங்கல் பண்டிகைக்கு செயல்பட தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துவங்கி வைத்தார். இந்தப் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இங்கிருந்து செயல்பட தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகை வரை வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருக்கிறது . மேலும் வெளி மாநில பேருந்துகளும் வருகின்ற ஓராண்டுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருக்கிறது .
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஓராண்டுகளுக்கு பின் அங்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். ஐடி பூங்காக்கள் விளையாட்டு அரங்கம் நாற்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய சட்டசபை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்படலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனைப் பற்றிய அறிவிப்புகள் இனி வரக்கூடிய காலங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.