புதிய பான் 2.0 திட்டம் எதற்கு..? ஒரே இணையத்தில் எல்லாம்... மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்...!
நிரந்தர கணக்கு எண் ,வரிபிடித்தம் செய்வோருக்கான எண் (டான்) ஆகியவற்றை வழங்கி அதன் செயல்பாடுகளை எளிதாக்கி நிர்வகிப்பதற்கு ஏதுவாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண் (பான்) 2.0 திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் பான் மற்றும் டான் எண்களை வழங்குவதுடன், அதன் செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள 78 கோடி நிரந்தர கணக்கு எண் அட்டைகள் மற்றும் 73.28 லட்சம் TAN எண்களின் தரவுத்தளத்துடன், இந்த திட்டம் வரி செலுத்துவோரின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
தற்போது, பான் தொடர்பான சேவைகள் மூன்று வெவ்வேறு இணைய தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான இணையதளம், யுடிஐடிஎஸ்எல் இணையதளம் மற்றும் புரோட்டீன் இ-கவ் இணையதளம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த சேவைகள் அனைத்தும் ஒரே இணையதளத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் விண்ணப்பம், புதுப்பிப்புகள், திருத்தங்கள், ஆதார்-பான் இணைப்பு, மீண்டும் வழங்குமாறு கேட்கும் வேண்டுகோள்கள் மற்றும் ஆன்லைன் பான் சரிபார்ப்பு உள்ளிட்ட பான் மற்றும் டான் தொடர்பான விரிவான அனைத்து விஷயங்களையும் கையாளும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.