’இது இருந்து என்ன புண்ணியம்’..? ’வருவாய் குறையுதே’..!! மூடப்படுகிறதா சார் பதிவாளர் அலுவலகம்..?
சார் பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பத்திரப்பதிவு குறைவாக நடைபெறும் சார் பதிவு அலுவலகங்கள் குறித்தும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பதிவுத்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கினை நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில், பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வாரி வழங்கி கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, பொதுமக்களின் நன்மை கருதி, அவர்களின் வசதி கருதி, ஏராளமான சலுகைகளை அளித்து வருகிறது. முக்கியமாக, பத்திரங்களை பதிவு செய்யும்போது, சில பத்திரங்களை சார் - பதிவாளர் நிலுவையில் வைத்துவிடும் நிலைமை உள்ளது. அதாவது, சர்ச்சையான பத்திரங்கள், பட்டாவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம், இணைய வழியில் பட்டா குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பத்திரங்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. அதனால்தான், உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது, நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும் என்று சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த வாரம்கூட உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், பத்திரப்பதிவு குறைவாக உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை மூடுவதற்கான பணிகளை பதிவுத்துறை துவக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில், பெரும்பாலான அலுவலகங்களில் ஆண்டுக்கு 2,000-த்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. ஆனால், சில பகுதிகளில் மட்டும் வருடத்துக்கு வெறும் 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகிறதாம். எனவே, இந்த அலுவலகங்களால், வருவாய் இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்படுகிறது. வருவாய் எட்ட முடியாத சூழலில், இந்த அலுவலகங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் எழுகிறதாம்.
இதற்கு தீர்வாக, குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை மூடுவது குறித்து பதிவுத்துறை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வருவாய் குறைவான இந்த அலுவலகங்களை ஒரேடியாக இழுத்து மூடாமல், அருகில் இருக்கும் வேறு சார் -பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டது எப்போது, கடந்த 3 நிதியாண்டுகளில் பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை விவரங்கள் என்னென்ன என்பதையெல்லாம் பட்டியலாக தயாரித்து, வரும் 29ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.
Read More : ’இந்த தவறை நீங்களும் செய்யாதீங்க’..!! இயற்கையான முறையிலும் உடல் எடையை குறைக்கலாம்..!! டிப்ஸ் இதோ..!!