உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் 'டிங்கா டிங்கா' நோய்.. 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! - அறிகுறிகள் என்னென்ன?
உகாண்டாவின் ‘பண்டிபுக்யோ’ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 'டிங்கா டிங்கா' எனப்படும் ஒரு வினோதமான நோயால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களால் ‘டிங்கா டிங்கா’ என்றழைக்கப்படும் அந்த மர்மக் காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பதில்கூடச் சவாலை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கியிதா கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறும் நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடுகிறார்கள் என்றும் ‘பண்டிபுக்யோ’ மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் அந்த நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டுச் சுகாதார அமைச்சுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அந்த நோயைப் போன்று இதற்கு முன்னர் 1518ஆம் ஆண்டு பிரான்சில் ‘டேன்சிங் ப்ளேக்’ எனப்படும் மர்மநோய் பரவியது. அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்குத் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள் ; உகாண்டாவின் பூண்டிபுக்யோ மாவட்டத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த விசித்திரமான நோய், பல்வேறு அமைதியற்ற அறிகுறிகளை அளிக்கிறது, கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம், நடமாடுதல் போன்ற அறிகுறிகள் முதலில் தோன்றும். இதனுடன், அதிக காய்ச்சல், தீவிர பலவீனம் மற்றும் சில சமயங்களில் பக்கவாத உணர்வையும் அனுபவிக்கின்றனர்.