'10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வசம் சென்ற எதிர்கட்சி பதவி!!' மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரங்கள் என்ன?
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் பா.ஜ.க வசம் சென்றது, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையும் காலியானது. அதைத்தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாகப் பெரிய வெற்றியைப்பெற, காங்கிரஸ் வெறும் 52 இடங்கள் பெற்று மீண்டும் படுதோல்வியடைந்தது. இதனால், 2019-லும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது.
இவ்வாறாக, 2014 முதல் 2024 வரை பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளிலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது. பாஜக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாமலே செயல்பட்டது. காரணம், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க குறைந்தபட்சம் 272 இடங்கள் தேவைபடுவதை போல, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகச் செயல்பட குறைந்தபட்சம் 55 இடங்கள் தேவை. அதாவது, மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களை ஒரு கட்சி பெறவேண்டும்.
இப்படியிருக்க தற்போது நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையைப் பெறமுடியாமல் என்.டி.ஏ கூட்டணியாக 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தாலும், மக்களவையில் இந்த முறை எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை உறுதியாகியிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பெற்ற 234 இடங்களில் காங்கிரஸ் மட்டுமே 99. இதோடு, மகாராஷ்டிராவில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஷால் பாட்டில் என்பவர் காங்கிரஸில் தற்போது இணைந்ததன் மூலம் காங்கிரஸின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக 100-ஐ தொட்டிருக்கிறது.
இதன்மூலம் தற்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக முன்மொழியப்பட்ட மோடி நாளை மூன்றாவதாகப் பிரதமராகப் பதவியேற்கும் நிலையில், காங்கிரஸில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்று இன்னும் முடிவாகவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், 99 இடங்களில் வென்ற காங்கிரஸ், மக்களவையில் மீண்டும் எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றம் சரியாக இயங்குவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பை உடையவரே எதிர்க்கட்சி தலைவர். அரசு தவறான திட்டங்களை அல்லது கொள்கைகளை வகுக்கும்போது மக்கள் பக்கம் நின்று குரல் கொடுப்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை.
சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சி தலைவர் அங்கம் வகிப்பார். எதிர்க்கட்சி தலைவருக்கென தனி வீடு ஒதுக்கப்படும். அதற்கு வாடகையோ, பராமரிப்புத் தொகையோ செலுத்த வேண்டியதில்லை.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பவர் கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்தை உடையவர். நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவர் இருப்பார். குறிப்பாக, பொதுக் கணக்கு, பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சி தலைவர் செயல்படுவார்.
Read more ; Gold Rate | நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,520 சரிவு..!!