’கட்சியின் கொள்கைகள் என்ன’..? ’சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்’..!! நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை..!!
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் இறங்கப்போவதாகத் தொடர்ச்சியாகப் பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும், கடந்த ஆண்டு 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசுத் தொகை அளித்த பிறகு கிட்டத்தட்ட அந்த செய்திகள் உறுதியாகின.
அதன் பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தில் தனி தனியாக வழக்கறிஞர் பிரிவு, மகளிரணி என அடுத்தடுத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில் VVIP-க்களிடம் விஜய் சந்தித்து பேசியதாகவும், கட்சிப் பெயர் குறித்து மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
இப்படியிருக்க, இன்று காலை முதல் விஜய் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் பெயர் அல்லது அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அந்தவகையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜயின் கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
என்னை பொறுத்தவரை அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. எம்முன்னோர் பலரிடமிருந்து அரசியல் பாடங்களை படித்து நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
அரசியலில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.