”முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்”..!! தமிழ்நாட்டில் HMPV குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி..!!
HMPV தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
HMPV தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்த வைரஸ் பரவியது முதல் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களை கண்காணித்து வருகிறோம். விமான நிலையங்களில் இது போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர காலம் ஏதேனும் இருந்தால் உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும். பின்னர், அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படும். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த வைரஸ் தோன்றியது. இந்த பாதிப்பு இருந்தால் 2 முதல் 3 நாட்களுக்கு இருமல் சளி பாதிப்பு இருக்கும். உடல் நலக்குறைவு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். முகக்கவசம் அணிவது, இடைவெளி பின்பற்றுவது தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த வைரஸ் பொருத்தவரை 2 நாட்களுக்குப் பிறகு அதுவே நீங்கிவிடும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்துவது சிகிச்சை தான். சேலம், சென்னையில் இருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 65 வயதுமிக்க ஒரு நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு உடல் நலக் குறைவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 45 வயது நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கும் உடல்நல குறைவு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த பாதிப்பு பொறுத்தவரை அதிகமான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பொது வெளியில் செல்லும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சீனாவில் எப்பொழுதுமே மக்கள் முக கவசம் அணிவார்கள். சானிடைசர் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை கை கழுவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் எதுவும் இந்த வைரஸுக்கு தேவையில்லை. இந்த வைரஸ் பொருத்தவரை எந்த சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும். காய்ச்சல், சளி உள்ளவர்கள் வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை. உடல்நலம் குறைவாக இருப்பவர்களுக்கு எந்த வைரஸாக இருந்தாலும் தாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.