திமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க மாட்டோம்...! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு கருத்து..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. தோழமைக் கட்சிகளுக்கு கூட்டணியில் தான் இடம் கொடுப்போம், ஆட்சியில் கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி; தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல், இந்த 2 கட்சிகளாலும் வெற்றி பெற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது குறித்து பதில் சொல்ல முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடக்கிறது.
ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள், அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கொடுத்தது இல்லை. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகமான அக்கறை எடுத்து வருகிறார். எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பார்க்கமாட்டார். சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதில் உறுதியாக இருப்பார்.
கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் குட்கா வழக்கில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரே அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தான். சின்ன தவறு மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எதையும் கண்டும், காணாமல் இருக்கும் அரசு இல்லை. அரசு மீது சிறிய கரும்புள்ளி கூட விழுக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.