"வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்" "அதிமுக குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்" - தேர்தல் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!
எங்கள் கூட்டணியை பற்றி நடத்தப்படும் விஷம பிரச்சாரங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி மற்றும் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு பல மாநிலங்களிலும் சமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளுடனே இந்த தேர்தலிலும் தொடர்கிறது. அந்த கூட்டணியில் இருந்த தேசிய ஜனநாயக கட்சி மட்டும் விலகி இருக்கிறது.
திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விரைவில் முடிந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் கூட்டணியில் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் அந்த கட்சி பாரதிய ஜனதா கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. இந்த முறை அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டதால் இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தமிழகத்தில் போராடி வருகிறது.
அதிமுக கடந்த தேர்தல்களில் தங்களுடன் கூட்டணி அமைத்த தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போன்றவற்றுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கட்சிகளும் மாநிலங்களவை சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அதிமுக கட்சியின் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது. ஆனாலும் அதிமுக இன்னும் பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசிய கூட்டணியில் இருப்பதாக பலரும் தெரிவித்து வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக தனது கூட்டணியை வெளியிடும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் " அதிமுக கூட்டணியை பற்றி பலரும் விஷம கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக கூட்டணியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நாங்கள் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கி விட்டோம் . வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எங்கள் உறுப்பினர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழக உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் இதுதான் அதிமுகவின் தேர்தல் முழக்கம் என தெரிவித்துள்ளார்.