For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வன்முறை இல்லா உலகம் வேண்டும்!. இன்று உலக அமைதி தினம் 2024!. தீம், வரலாறு, முக்கியத்துவம் இதோ!

International Day of Peace 2024
06:56 AM Sep 21, 2024 IST | Kokila
வன்முறை இல்லா உலகம் வேண்டும்   இன்று உலக அமைதி தினம் 2024   தீம்  வரலாறு  முக்கியத்துவம் இதோ
Advertisement

World Peace Day 2024: அமைதி வேண்டும் என ஏங்காதவர் எவருமில்லை. உலக அமைதியின்மை தனி மனித அமைதியை பாதிக்கிறது என்பதுபோல், தனிமனித அமைதியே உலக அமைதிக்கு வித்திடுகிறது. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமைதி கலாச்சாரம் குறித்த பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பது" என்பதாகும்.

Advertisement

உலக அமைதி தினம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 2002இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. 1961ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவுகூரும் விதமாக செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடிக்கத் துவக்கப்பட்டது.

எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற “அமைதியான வாழ்வு” வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி, “உலக அமைதி நாளாக” ஐ.நா. நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அமைதி வேண்டும் என்றுதான் உலகில் ஒவ்வோர் உயிரும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. உலக அமைதியின்மை தனி மனித அமைதியை பாதிக்கிறது என்பதுபோல், தனிமனித அமைதியே உலக அமைதிக்கு வித்திடுகிறது.

அமைதி, அமைதி என்று ஒரு நாள் அந்த அமைதியைப் பெற்று விட்டோம் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். அது, அடுத்த போருக்கான ஆயத்த காலமோ என்றுகூட அச்சம் எழுந்துவிடும். ஏனெனில், அமைதி என்பது தக்கவைத்துக்கொள்ள முடியாத ஒன்றோ என்றுகூட நாம் நம்பத் துவங்கிவிட்டோம். நாம் ஒரு காலத்தில் கொள்கைக்காக போரிட்டோம், இன்றோ, எல்லைக்காகப் போரிடுகிறோம்.

போருக்கான எல்லைகளை வகுக்க முடியாத அளவுக்கு ஓய்வின்றி போராடிக் கொண்டிருக்கிறோம். கடவுளை அமைதி, அன்பு என்று கூறிக்கொண்டே அவர் பெயரால் எத்தனை கொலைகள்?. இன்று. கடவுளுக்காகச் செய்வதாக எண்ணி எத்தனை உயிர்பறிப்புக்கள். கோபம், வெறுப்பு, விரோதம், பாராமுகம் என்பவைகளால் இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை எத்தனை?. நாமும் இதற்கு காரணமாக இருந்திருக்கிறோமா, வாய் மூடி மௌனம் காத்ததன் வழியாக?. உலகம் சமநிலை பெறவும், உலகில் அமைதி நிலவவும் நாம் என்ன செய்திருக்கின்றோம் இதுவரை?.

செப்டம்பர் 21ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் நாம் சிறப்பிக்கும் உலக அமைதி தினம் நம்மிடம் சொல்லவருவது தான் என்ன? அமைதியை நிலைநாட்டுவதும் பராமரிப்பதும் அரசுகளின் முழுப்பொறுப்பு அல்ல, ஆனால் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிரமான பங்கேற்பு தேவை என்பதை முதலில் நாம் உணரவேண்டும். உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுத்து சண்டை சச்சரவுகளை தீர்த்து, உலகில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் மட்டுமல்ல, மற்ற உலக நாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக, உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. நிறுவனம் அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது.

அண்மை ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள், காற்று-நீர் மாசுபாடு, அபரிமிதமான இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியை தொலைத்து வருகின்றன. ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் பலவும் இப்போதும்கூட வறுமை காரணமாக அமைதியை தொலைத்து உழல்கின்றன.

உள்நாட்டு போரால் அமைதியை தொலைத்த நாடுகளுக்கு அண்மை உதாரணமாக ஆப்கானிஸ்தானை சொல்லலாம், அங்கு நடந்த உள்நாட்டு போர் காரணமாக சாமானிய மக்களின் அமைதி தொலைந்து போனது. மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அமைதியின்றி தவிக்கின்றனர். சிரியா, ஏமன், லிபியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் தொடர்ச்சியாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது, இதில் பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பின் தாக்கமும் உள்ளது. யுத்தங்கள் உருவாவதில்லை, அவை திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நாடுகள் உணர்ந்து வருகின்றன.

போர்களைவிடவும் மக்களை அதிகம் கொல்லும் ஆபத்தாக தற்போது இயற்கை சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. இப்படி உலகமெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் “உலக அமைதி” என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்கான உன்னத தேவையாகிறது என்பதே உண்மை.

வன்முறை இல்லாத அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பதே நம் அனைவரின் நோக்கமாக மாறவேண்டும். ஒத்துழைப்பின் மூலம் உலக அமைதியை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தை உருவாக்க நம் பங்களிப்பை வழங்க வேண்டும். மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கவும், சமூக நீதியை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய அவசரத் தேவையை நாம் முதலில் உணரவேண்டும். சமகால சவால்கள் மற்றும் சமாதானத்தை அச்சுறுத்தும் சிக்கல்களை சமாளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அமைதிக்கான நடவடிக்கைகளை உலகளாவிய இலக்குகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முதலில் நம்மிலிருந்து துவங்கவேண்டும். வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், இலஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபட்டு அமைதியான, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட நாம் உறுதியேற்க வேண்டியிருக்கிறது. இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கு, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுடன் நாம் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது.

அமைதியை வளர்ப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து தனிநபர்களும் செழிக்கக்கூடிய உலகத்தை உருவாக்குவதற்கும் நமது கூட்டுப் பொறுப்பின் சக்திவாய்ந்த நினைவூட்டல் நம் ஒவ்வொருவரிலும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாம் எதை நோக்கிய பயணம் என்றால், ஏற்றத்தாழ்வில்லா உலகை படைப்பதன்வழி உலக அமைதியை உருவாக்குவதற்காகும்.

Readmore: பெண்களே அதிக பாதிப்பு!. உலக அல்சைமர் தினம் 2024!. அல்சைமர் நோய் என்றால் என்ன?. காரணம் மற்றும் அறிகுறிகள்!

Tags :
Advertisement