MK.Stalin: தமிழக ஆளுநரிடம் நாங்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறோம்..! முதல்வர் ஸ்டாலின் பேச்சு...!
தமிழகத்தில் ஒரு IPS அதிகாரி ஆளுநராக செயல்படுகிறார், அவரிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர்; நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்தது பாஜக. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது பாஜக. தமிழகத்தில் ஒரு IPS அதிகாரி ஆளுநராக செயல்படுகிறார், அவரிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறோம்.
மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல நடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு புதுச்சேரி முதலமைச்சரும் துணை போகிறார். ஆளுநர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்னைதான். மாநில உரிமை மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது.
ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா, அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுகிறது.
புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு அறிமுகமே தேவையில்லை. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினின் பிரதிநிதியாக ஒவ்வொருவரும் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்க வேண்டும்.