Wayanad Landslides | நிலச்சரிவில் 138 பேர் மாயம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வயநாட்டில் எற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 138 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகள் மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளின் வாக்காளர் பதிவுகளின் அடிப்படையில் காணாமல் போன 138 பேரின் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து, ஐசிடிஎஸ், மாவட்ட கல்வி அலுவலகம், தொழிலாளர் அலுவலகம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவற்றின் அதிகாரப்பூர்வ பதிவேடுகளை தொகுத்து, காணாமல் போனவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகாம்களில் வசிப்பவர்கள், உறவினர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இது முதல்கட்ட தகவல் என்றும், பொதுமக்கள் இதனை சரிபார்த்து விடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட தகவல்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்புகளின் அடிப்படையில் பட்டியலில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று நிர்வாகம் வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
வரைவு பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://wayanad.gov.in/ இல், மாவட்ட ஆட்சியரின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகைகள் போன்றவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் 8078409770 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்காய் பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி ஒன்பதாவது நாளாக தொடர்ந்தது, இராணுவம் மற்றும் கடற்படை உட்பட பல்வேறு படைகளைச் சேர்ந்த 1,026 பணியாளர்கள், 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.
Read more ; வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்..!! – ராகுல் காந்தி வலியுறுத்தல்..