வீராணம் ஏரியிலிருந்து கடலூருக்கு தண்ணீர் திறக்க வேண்டும்...! ராமதாஸ் கோரிக்கை
கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால், பயிர்கள் வாடும் நிலை உருவாகியிருக்கிறது. உழவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து பயிர் சாகுபடி செய்ய அறிவுறுத்தி விட்டு, இப்போது தண்ணீரை திறக்காமல் உழவர்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் அமைந்துள்ள வீராணம் ஏரி அம்மாவட்டத்தின் முதன்மையான பாசன ஆதாரங்களில் ஒன்றாகும். மொத்தம் 47.50 அடி உயரமும், 1.46 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட வீராணம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். கடலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் சாகுபடி நடைபெறும் என்றாலும் கூட, வீராணம் ஏரியின் பாசனப் பகுதிகளில் சம்பா பருவ சாகுபடி மட்டுமே செய்யப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருப்பதாலும், செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாலும் இந்த முறை சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே நெல் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், வீராணம் ஏரியிலிருந்து இன்று வரை கடலூர் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. ஒருபுறம் வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு சராசரியாக 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மற்றொருபுறம், பாசனக் கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்படாததால் தான் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வில்லை என்று இன்னொருதரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.
வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஏரியின் மொத்தக் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மேட்டூர் அணையும் கிட்டத்தட்ட நிறைந்து தளும்புகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் கொள்ளிடத்தில் திருப்பி விட்டு, அந்த நீர் கீழணைக்கு வருவதை உறுதி செய்தால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக அளவாக ஒரு வாரத்தில் வீராணம் ஏரியை நிரப்பி விட முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பாசனத்திற்கு திறக்க அந்த தண்ணீர் போதுமானது. தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு திறக்க மறுப்பது அநீதியாகும்.
கடலூர் மாவட்ட பாசனத்தைக் கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அப்பகுதி விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், நுண்ணூட்டச் சத்து உள்ளிட்ட இடுபொருட்களையும், பயிர்க்கடனையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.