"சொட்ட சொட்ட நனையுது..., ஏரோப்ளேனா இல்ல டவுன் பஸ்ஸா."? பயணியின் வீடியோவால் வெளியான அவலம்.!
மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் இந்தியா விமானத்தில் தான் இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் ஒருவர் ஏர் இந்தியா உங்களுடன் பயணம் செய்யுங்கள் என்று விளம்பரம் செய்கிறீர்கள் என்னுடைய பயணம் ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது என தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு 70 வருடங்களாக அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் டாட்டா நிறுவனத்திற்கு தனியார் மயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கிறது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 24ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் மிகவும் அரிதான ஒரு தவறு நடைபெற்றிருக்கிறது. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். நீர் கசிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த இருக்கையில் இருந்த பயணிகள் வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். விமானப் பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள் என தெரிவித்திருக்கிறது.