Watch: ’எங்களுக்கு தெரியும்... பெருசா பேச வந்துட்டாரு’..! செண்ட்ராயனை கடுமையாக பேசிய கே.ராஜன்..!
”லோக்கல் சரக்கு” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜனுக்கும், நடிகர் செண்ட்ராயனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்திருக்கும் படம் 'லோக்கல் சரக்கு'. இந்த படத்தை விஜய்யின் சுறா மற்றும் அழகை மலை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்க, டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் சுவாமிநாதன் ராஜேஷ் இந்த படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தீனா, நடிகர்கள் ராதாரவி, செண்ட்ராயன் மற்றும் படத்தின் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது தயாரிப்பாளர் கே.ராஜன் மேடையில் பேசியதற்கு நடிகர் செண்ட்ராயன் இடைமறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதோடு, சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது. அதில், ”நீங்கள் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறீர்கள். ஆனால், எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்துவிட்ட பிறகு தயாரிப்பாளராக வாருங்கள். முதலில் நன்றாக சம்பாதியுங்கள். அதன் பிறகு படம் எடுங்கள்.” என லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான சுவாமிநாதன் ராஜேஷை கே.ராஜன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய கே.ராஜன், ”படம் எடுக்க தொடங்கிவிட்டால், இசையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். தயாரிப்பாளராக இருப்பவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்தாலும் நடுத்தெருவுக்குதான் வருகிறார்கள். நடிகர், நடிகைகள் பலரும் வளர்ச்சியை எட்டுவதற்கு காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்களை நினைத்து பார்க்க வேண்டும். அதுதான் நன்றி கடன். ஆனால் அதை யாருமே செய்வதில்லை” எனக் கூறியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட நடிகர் செண்ட்ராயன், “எங்களுக்கு தயாரிப்பாளர்கள்தான் முதலாளி. அவர்கள் படம் எடுத்தால்தால் எங்களுக்கு வேலை” எனக் கூறினார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த கே.ராஜன் செண்ட்ராயனை பார்த்து “போ பா போய் உட்காரு. நாங்க உங்களுக்கு வேற வேல வாங்கி தரோம். அவங்களுக்கு வேலை இல்லாமல் ஆகிட கூடாது. எங்களுக்கு தெரியும். பெருசா பேச வந்துட்டாரு” என பரபரத்து பேசினார். மேலும், “உங்களுக்கு வேலை கொடுப்பதற்காக நாங்களெல்லாம் வெளிய போகணுமா?” எனவும் கே.ராஜன் காட்டமாக பேசியிருக்கிறார்.