எச்சரிக்கை!. நிபா வைரஸால் 14வயது சிறுவன் பலி!. வௌவால்களில் இருந்து வைரஸ் பரவியது உறுதி!
Nipah virus: கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், வௌவால்களில் இருந்து அந்த வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் மாதிரி, மஹாராஷ்டிராவின் புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜூலை 21ம் தேதி சிறுவன் உயிரிழந்தான்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இருந்த கடை ஒன்றில் இருந்து சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்டதும், அந்த கடையில் வௌவால்கள் நடமாட்டம் இருந்ததும் சுகாதார துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. சிறுவன் வசித்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த வௌவால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், வௌவால்களில் இருந்து நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது, சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் பகுதியில் இருந்து 27 வௌவால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஆறு வௌவால்களில் நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 472 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவர்களில் யாருடைய உடலிலும் நிபா வைரஸ் இல்லை. இருப்பினும், நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 261 பேர், 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். நிபா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
Readmore: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு?. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்!