மழைக்காலத்தில் வரும் நோய்களை எப்படி தடுப்பது? இதை எல்லாம் ஃபாலோ பண்ணா போதும்..
மழைக்காலம் வந்துவிட்டால் பருவமழை தொடர்பான நோய்களும் வர தொடங்கிவிடும். இந்த மழைக்காலத்தில் கவனமாக இல்லை எனில், பல உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். சளி, காய்ச்சல் மட்டுமின்றி வேறு சில உடல் நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
மழைக்காலத்தில் பொதுவாக உடலின் ஆற்றலைக் குறைக்கிறது. இதனால் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சாத்தியமான அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், மழைக்காலத்தை பாதுகாப்பாக அனுபவிக்கவும் உதவும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் வரும் உடல்நல பிரச்சனைகளை தடுப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
சரியான ஊட்டச்சத்து : உடல்நல அபாயங்களில் இருந்து விலகி இருக்க மழைக்காலங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். வெளியே கிடைக்கும் தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு பதில், வீட்டிலேயே ஆரோக்கியமான தின்பண்டங்களை செய்து சாப்பிடுங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்ற இயற்கையான பொருட்களை உட்கொள்ளுங்கள்.
சத்தான பானங்கள் எடுத்துக்கொள்வது எளிதானது மட்டுமல்ல, நோயைத் தடுக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறுதிசெய்து சீரான உணவைப் பராமரிக்க உதவுகிறது.
புதிதாக சமைத்த உணவு : சரியான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கான மற்றொரு வழி, சாலையோர உணவுகளை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது அவசியம். ஏனெனில் சாலையோர கடைகளில் கிடைக்கும் உணவுகள் கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியது.
ஆனால் வீட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகள், உணவு மூலம் பரவும் நோய்களைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்
உங்கள் கைகளை தவறாமல் கழுவவும் : மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ள ஆனால் எளிமையான வழிகளில் ஒன்று உங்கள் கைகளை கழுவுவது. சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை தவறாமல் கழுவவேண்டும். இது சுவாச நோய் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும், தங்கள் கைகளை முறையாகவும், சீரான இடைவெளியிலும் கழுவுமாறு ஊக்குவிக்கவும்.
நீரேற்றம் : நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும், சுத்தமான தண்ணீரைக் குடிப்பது அவசியம். ஏனெனில் அசுத்தமான நீர் மழைக்காலத்தில் இரைப்பை குடல் பிரச்சினைகள் அல்லது பிற வகையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும். எனவே, நீர்ச்சத்துடன் இருக்க சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்கவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் : பெரும்பாலான நோய்கள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் ஏற்படுகின்றன. எனவே உங்கள் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை சேர்ப்பது அவசியம். மேலும் இது பருவமழையின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள், கிராம்பு, பூண்டு மற்றும் இஞ்சி போன்ற சில பொதுவான மசாலாப் பொருட்கள் உங்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகின்றன. சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் இந்த உணவுகள் நன்மை பயக்கின்றன.
Read More : தினமும் வாக்கிங் போறதுக்கு கஷ்டமா இருக்கா? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..