"பேச ஆரம்பிச்சாலே சண்டையா."? இந்த ரிலேஷன்ஷிப் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க இனி எல்லாம் சுகமே.!
கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது திருமண பந்தத்தில் வெள்ளி விழா கொண்டாடி இருந்தாலும் கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் புரிதல் தான் அவர்களது உறவை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவனிடம் உள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்வது அவர்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
கணவர் அலுவலகப் பணி முடித்து வீட்டிற்கு வரும்போது அவர்களது கவனம் உடனடியாக தங்கள் மீது இருக்க வேண்டும் என்று அனேக மனைவிமார்கள் விரும்புகின்றனர். ஆனால் கணவரது பணிச்சூழல் மற்றும் அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கணவருக்கு தேவையான தனிமை மற்றும் அதற்கான இடத்தை கொடுப்பது அவசியம். இது கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையேயான இல்லறம் மகிழ்ச்சியாக இருக்க முக்கியமான ஒரு காரணம் ஆகும்.
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படுவது விவாதங்களின் போது தான். நீங்கள் உங்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனையைப் பற்றி உங்கள் கணவரிடம் விவாதிக்கும்போது அவரது பார்வை எங்கே செல்கிறது என்று கவனிக்காதீர்கள். அவர் நீங்கள் கூறுவதை செவி கொடுத்து கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் பார்வைகளை வேறு இடங்களில் செலுத்தினாலும் உங்களது பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள் எனவே அவர்களை குற்றம் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்று உங்களுக்கு தோன்றினால் அவரிடம் அன்பான முறையில் அவர் உங்கள் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை என்பதை அறிய படுத்துங்கள்..
எல்லா உறவுகளிலும் சண்டை என்பது இருக்கும். ஆனால் உங்கள் இருவருக்கும் இடையேயான சண்டை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தேவையில்லாமல் கத்துவது பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடும். எனவே உங்கள் கணவரிடம் ஒரு விஷயத்தை எப்போது விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அவரது மனநிலை மற்றும் சூழ்நிலைகளை உணர்ந்து சரியான நேரத்தில் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுங்கள். இதுபோன்று செய்வதன் மூலம் தேவையில்லாத சண்டை சச்சரவுகளை தவிர்க்க முடியும்.