நாளை வாக்குப்பதிவு..!! ஐசியூவில் மன்சூர் அலிகான்..!! எப்படி இருக்கிறார்..? உடல்நிலையில் பின்னடைவா..?
வேலூர் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் மன்சூர் அலிகான். பிறகு பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ‛லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகை த்ரிஷா தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அந்த பிரச்சனைகளை கடந்து வந்த மன்சூர் அலிகான், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
வேலூர் சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகான் சுயேட்சையாக களமிறங்கி உள்ளார். மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், பிரச்சாரம் மேற்கொள்ள குடியாத்தத்திற்கு சென்ற அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியூவில் மன்சூர் அலிகானை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.