3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடக்கம்...! முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் போட்டி...
3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற உள்ளது.
18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற உள்ளது.
அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால், இத்தொகுதியில் வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர் அமித் ஷா காந்தி நகரில் போட்டி, குணாவில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், பாராமதியில் சுப்ரியா சுலே உட்பட மொத்தம் 1,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.