போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு செல்லும் இந்திய விமானங்கள் ரத்தாக வாய்ப்பு !
இஸ்ரேல் -ஈரான் போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போரினால், 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.
இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டதால் மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை நாட்டு மக்களுக்கு விடுத்தன.
இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிங் நகருக்கு இயக்கப்பட்டு வரும் விமான சேவைகளை நிறுத்த விமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. மேலும் இஸ்ரேல் வான்வழிப்பாதை வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.