விருதுநகர் பட்டாசு விபத்து... ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும்...!
விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் - அசோக் பட்டாசு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 20 லட்சம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், கண்டியாபுரம் கிராமத்தின் அருகே அசோக் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஏற்பட்ட விபத்தில் 5 ஆண், 5 பெண் தொழிலாளர்கள் மரணமெய்தி உள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாக்பூரில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதியுடன் வாண வேடிக்கைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தி வரும் 'மணி மருந்து' பயன்பாட்டின் போது இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. இந்த வகை மருந்துகளை மிகவும் எச்சரிக்கையாக உபயோகிக்க வேண்டும். ஒரு உற்பத்தி படிநிலையில் ஏற்பட்ட தவறின் காரணமாக 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த நான்கு-ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகாபுரி மற்றும் சுற்றுப்புறக் கிராமத்தைச் சார்ந்த பலர் இதுபோன்ற பட்டாசு ஆலை விபத்தில் இறந்தார்கள். பட்டாசு ஆலைகளில் ஆண்டுதோறும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதனால், சாதாரண ஏழை, எளிய தொழிலாளர்கள் உயிர்கள் பறிக்கப்படுவது சுவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ 3 லட்சமும், மாநில அரசு ரூ 3 லட்சமும் கொடுப்பதால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எந்த விதமான பெரிய பலனும் கிடைத்து விடப் போவதில்லை. விலை மதிப்பற்ற உயிர்களுக்கு இரண்டு மூன்று லட்சம் மட்டும் அறிவித்து இருப்பது அத்தொழிலாளர்களை அவமதிப்பது போலத் தோன்றுகிறது.
தமிழகமெங்கும் எங்கெல்லாம் பட்டாசு ஆலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் இது போன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கோடை வெயில் காலகட்டத்தில் வெடி விபத்துகளுக்கான சூழல் மிக அதிகமாகவே இருக்கும். சிறிய அல்லது பெரிய தொழிற்சாலைகள் என பிரித்துப் பார்க்காமல் எங்கெல்லாம் பட்டாசு தொழில் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மத்திய வெடிபொருள் கழகமும், மாநில அரசுக்குட்பட்ட நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளக் கட்டுப்பாடுகளை பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்படுகின்றனவா? என ஆய்வு செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இந்த நட்ட ஈடு தொகை எந்த விதத்திலும் போதுமானது அல்ல. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 20 லட்சம் கிடைக்கக்கூடிய வகையில் வழிவகை செய்தால் மட்டுமே, இந்த குடும்பங்கள் இழப்பிலிருந்து பொருளாதார அளவில் மீள முடியும். மேலும், அரசின் உதவியைத் தாண்டி ஆலை நிர்வாக தரப்பில் தாராளமாக பாதிக்கப்பட்டோருக்கு தலா குறைந்தது ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பட்டாசு விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.