"வந்தாச்சு 'Virtual ATM'.."! இனி பணம் எடுக்க ஏடிஎம் போக வேண்டாம்.. OTP இருந்தாலே போதும்.. புதிய வசதி.!
நீங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் இல்லாமல் உங்களால் பணம் எடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் என்று கூறுகிறது சண்டிகர் நகரை சேர்ந்த பேமெண்ட் இந்தியா என்ற கம்பெனி. ஏடிஎம் கார்டு, பின் நம்பர் மற்றும் ஏடிஎம்(ATM) இயந்திரத்திற்கு செல்லாமல் பணம் எடுக்கும் சேவையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான அமித் நரங் இந்தத் திட்டத்தை விர்ச்சுவல் ஏடிஎம் (Virtual ATM) என குறிப்பிடுகிறார்.
இந்த விர்ச்சுவல் ஏடிஎம் திட்டத்தில் பணம் எடுப்பதற்கு ஒரு ஸ்மார்ட்போன், மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன் மற்றும் இணையதள வசதி போதுமானது என ஹாப்பி மன்த் இந்தியா (Happy month India) தெரிவிக்கிறது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பர் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விர்ச்சுவல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு முதலில் உங்கள் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் இருந்து வங்கிக்கு பணம் எடுக்கும் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.
உங்கள் கோரிக்கையை வங்கியில் சமர்ப்பித்ததும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து OTP வரும். இந்த பாஸ்வேர்டை வைத்து பேமார்ட் விளம்பரப் பலகையுடன் இருக்கும் அருகில் உள்ள கடையிலிருந்து நீங்கள் கோரிக்கை செய்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் மொபைல் பேங்க் அப்ளிகேஷனில் அருகில் இருக்கக்கூடிய விர்ச்சுவல் ஏடிஎம்மில் பதிவு செய்த பேமார்ட் அனுமதி பெற்ற கடைக்காரர்களின் பெயர் செல்போன் நம்பர்கள் மற்றும் அவர்களின் லொகேஷன் போன்ற தகவல்களும் அப்டேட் செய்யப்படும். இதனை பயன்படுத்தி உங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பணம் பெறுவதற்கு ஏடிஎம் பாஸ்வேர்ட் பின் நம்பர் மற்றும் யுபிஐ என எதுவும் தேவையில்லை. விர்ச்சுவல் ஏடிஎம்மில் பதிவு செய்த பேமார்ட் கடைக்காரர்கள் ஏடிஎம் போல் செயல்பட்டு உங்களுக்கான பணத்தை கொடுப்பார்கள். இந்த வசதி பயணம் செய்பவர்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தற்போது பேமெண்ட் இந்தியா நிறுவனம் ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து விர்ச்சுவல் ஏடிஎம் சேவையை கடந்த ஆறு மாதங்களாக வழங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனம் இந்தியன் வங்கி ஜம்மு காஷ்மீர் பேங்க் மற்றும் கரூர் வைஸ்யா பேங்க் ஆகியவற்றுடனும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
விர்ச்சுவல் ஏடிஎம் சேவை சண்டிகர், மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் இந்த சேவையை வழங்க இருப்பதாக பேமெண்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல வங்கிகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் இந்தியா முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2000 ரூபாய் வரை விர்ச்சுவல் ஏடிஎம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என பேமெண்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிறிய தொகையை கோரிக்கையாக வைப்பவர்களுக்கு இந்த விர்ச்சுவல் ஏடிஎம் சிறந்த சேவையாக இருக்கும். அதிக தொகை எடுப்பவர்களுக்கு இது உகந்ததாக இருக்காது எனவும் அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தினால் நாட்டின் ஏடிஎம் இல்லாத பல பகுதிகளில் உள்ளவர்களும் எளிமையாக பணம் பெறுவதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் வங்கிகளும் அதிக பணத்தை செலவு செய்து ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க வேண்டிய தேவை இருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்.