தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார் விராட் கோலி!… வரலாற்றில் இடம்பெற்று அசத்தல்!
2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரன் மெஷின் விராட் கோலி தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின், கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் ஷர்மா, அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.
இருப்பினும் 47 ரன்களில் அவுட்டாகினார். பின்னர் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற, மற்றொருபுறம் விராட் கோலி, ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், விராட் கோலி 54 ரன்கள், கே.எல். ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் அவுட்டாகினர். அதன்படி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 240 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர் 7 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து இறங்கிய மிட்செல் மார்ஸ்15 ரன்களிலும், ஸ்மித் 4 ரன்களிலும் அவுட்டாகினர். பின்னர் ஒற்றை ஆளாக போராடிய ஹெட், மார்னஸ் லாபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினார். அதன்படி ஹெட் 137 ரன்கள், லாபுசாக்னே 58 ரன்கள் குவித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
நடப்பு உலகக்கோப்பைக்கான தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 இந்திய வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இருந்தனர். அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்துள்ளார். உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது: 1992 – மார்ட்டின் குரோவ், 1996 – சனத் ஜெயசூர்யா, 1999 – லான்ஸ் க்ளூஸ்னர், 2003 – சச்சின் டெண்டுல்கர், 2007 – க்ளென் மெக்ராத், 2011 – யுவராஜ் சிங், 2015 – மிட்செல் ஸ்டார்க், 2019 – கேன் வில்லியம்சன், 2023 – விராட் கோலி. இந்த தொடரில் 11 போட்டிகளை விளையாடிய விராட் கோலி 3 சதம், 6 அரைசதத்துடன் 765 ரன்கள் குவித்தார்.
தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள்: ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003, யுவராஜ் சிங் 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.