ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய மைல்கல்!… விமர்சிப்பவர்களை பற்றி கவலையில்லை என பேச்சு!
Virat kohli: 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45வது லீக் ஆட்டம் நேற்று மாலை அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
விராட் கோலி , வில் ஜேக்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். குஜராத் அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி- வில் ஜேக்ஸ் இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ் தொடர்ந்து சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபாரவெற்றி பெற்றது. 3வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த போட்டியில், 44 பந்துகளில் 70 ரன்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் 2024 இல் 500 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 500 ரன்களை எட்டிய பிறகு, டேவிட் வார்னரின் தனித்துவமான ஐபிஎல் சாதனையை கோலி சமன் செய்தார். கோலி 2011, 2013, 2015, 2016, 2018, 2023 மற்றும் 2024 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, “வில் ஜேக்ஸ் ஆரம்பத்தில் விரும்பிய வகையில் அதிரடியாக விளையாட முடியாததால் கடுப்பானார். அப்போது நாங்கள் கொஞ்சம் கலந்துரையாடினோம். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் அதிரடியாக விளையாடினார். அவரால் எந்தளவுக்கு அதிரடியாக விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும்” “குறிப்பாக மோகித் சர்மாவுக்கு எதிராக ஒரே ஓவரில் அவர் பெரிய ரன்கள் குவித்ததும் என்னுடைய வேலை மாறிவிட்டது. அவருடைய அதிரடியை நான் எதிர்ப்புறம் பார்த்ததில் மகிழ்ச்சி. இப்போட்டியை நாங்கள் 19 ஓவரில் முடிப்போம் என்று நினைத்தேன். ஆனால் 16 ஓவரிலேயே முடித்தது அற்புதமான முயற்சி.
வில் ஜேக்ஸ் சிறந்த டி20 சதங்களில் ஒன்றை அடித்தார். அதை நான் எதிர்ப்புறம் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி” “என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை அணிக்காக போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் நீங்கள் 15 வருடங்களாக செய்து வருகிறீர்கள். நீங்கள் அந்த சூழ்நிலையில் இருந்திருக்கவில்லை என்றால் வெளியே அமர்ந்து கொண்டு விளையாட்டை பற்றி பேசுவது என்ன என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”
“மக்கள் தங்களுடைய அனுமானங்களை தினந்தோறும் பேசலாம். ஆனால் எங்களைப் போல விளையாடியவர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். கடந்த 2 போட்டிகளைப் போல் நாங்கள் ஆரம்பத்தில் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது விளையாடுவது போல் நாங்கள் தொடர விரும்புகிறோம். நாங்கள் நமக்காக முன்னேற விரும்பி சுயமரியாதைக்காக விளையாடுகிறோம். நாங்கள் எங்களுக்காகவும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறோம்” என்று கூறினார்.
Readmore: நாகை – காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!