மணிப்பூரில் மீண்டும் வன்முறை!… 2 வீரர்கள் பலி!… பதற்றத்தில் மக்கள்!
மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், சில மாவட்டங்களில் மட்டும் அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.
ஆனாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில், மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலர், புத்தாண்டு தினமான கடந்த 1ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊரடங்கு அமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. மணிப்பூரின் மோரே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.
மோரே நகரில் மூன்று வெவ்வேறு இடங்களில் குகி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பாதுகாப்புப் படையினர் என்கவுன்டர் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். எஸ்பிஐ மோரே அருகே உள்ள பாதுகாப்புப் படையினரின் போஸ்ட் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். தற்காலிக கமாண்டோ போஸ்ட் மீது தீவிரவாதிகள் ஆர்பிஜி குண்டுகளை வீசி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தினர். போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றது தொடர்பாக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.