டைனோசர் முட்டைகளை குலதெய்வமாக வழிபடும் கிராமத்தினர்..!! அதுவும் இந்தியாவில்..!! எங்கு தெரியுமா..?
உலகம் முழுவதும் மனிதர்களின் தெய்வ நம்பிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் மக்களை ஆட்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக குல தெய்வமாக கொண்டாடப்பட்ட உருண்டைகள், காலத்தால் அழியாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியல் பொக்கிஷங்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் பட்லியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய். இவரது குடும்பத்தினர், தங்கள் தோட்டத்தில் இருந்த வெள்ளை கல் உருண்டைகளை தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்தனர். மேலும், சில குடும்பத்தினரும் தங்கள் நிலத்தில் இருந்த வெள்ளை கல் உருண்டைகளை, ககர் பைரவ் அதாவது தங்கள் நிலத்தை பாதுகாக்கும் காவலராக வழிபட்டு வந்தனர். இந்நிலையில், அந்த கல் உருண்டைகள் டைனோசர் முட்டைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வித்தியாசமான இந்த வடிவங்கள் குறித்து லக்னோவின் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் ஆய்வு செய்த போது, அவை சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு பழமையானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெயரிடப்படாத டைட்டானிக் பல்லிகள் எனப்படும் கிரெட்டேசியஸ் காலத்து டைனோசர்கள் மற்றும் அவற்றின் முட்டைகளின் புதைப்படிமங்கள் இந்தியாவில் முதன்முறையாக 1877ஆம் ஆண்டு கண்டறியப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டின் தொடக்கத்தில் நர்மதா பள்ளத்தாக்கை சுற்றி சுமார் 250-க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகளின் புதை படிவங்களை கொண்ட டைனோசர் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், அவற்றை மத்தியப்பிரதேச மக்கள் குலத்தெய்வமாக வழிபட்டு வந்தது சுற்றுவட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.